Welcome to ED (Tamil)
அவசர சிகிச்சைப் பிரிவுக்கு (EDக்கு) உங்களை வரவேற்கிறோம்
Wanju wanju, nidja
நாங்கள் பணிபுரியும் நிலத்தின் பாரம்பரிய பாதுகாவலர்கள், நூங்கர் தேசத்தின் வாட்ஜுக் மக்கள் என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம், மேலும் கடந்த காலத்திலும் நிகழ்காலத்திலும் மூத்தவர்களுக்கு நாங்கள் மரியாதை செலுத்துகிறோம்.
பேர்த் பிள்ளைகள் மருத்துவமனை PCH என்றும் அழைக்கப்படுகிறது. அவசர சிகிச்சைப் பிரிவு ED என்றும் அழைக்கப்படுகிறது.
உங்கள் பிள்ளை தனக்குத் தேவையான பராமரிப்பைப் பெற உதவ நாங்கள் இங்கே இருக்கிறோம்.
நாங்கள் மருத்துவ அல்லது உளநல அவசர நிலைமைகளைக் கொண்ட 15 அல்லது அதற்கு குறைந்த வயதுடைய பிள்ளைகளைப் பராமரிக்கிறோம். இது ஆஸ்திரேலிய குடிமக்கள் அல்லது குடியிருப்பாளர்களுக்கு இலவசமாகும்.
ஏற்கனவே இருக்கும் ஒரு வருத்தத்திற்காக உங்கள் பிள்ளை இன்னமும் PCH இல் பராமரிப்புப் பெறுவதானால் மற்றும் அது போன்ற ஒரு நோய் நிலைக்காக அவசர சிகிச்சைப் பிரிவுக்கு வருகை தருவதாக இருந்தால், இதனை 18 வயது வரை நீடிக்கலாம்.
உங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை எனின் ஒரு உரைபெயர்ப்பாளர் வேண்டும் எனக் கோருங்கள் அல்லது உங்களுக்கு உதவ எங்களுடன் பேசுங்கள். இந்தச் சேவை இலவசமானது.
காத்திருப்பு நேரங்கள்
அதிகமான நோய்வாய்ப்பட்ட பிள்ளைகள் வைத்தியரைப்பார்க்கக் காத்திருப்பதனால் அவசர சிகிச்சைப் பிரிவில் வேலை நிரம்பிக் காணப்படலாம். மிகவும் நோய்வாய்ப்பட்ட பிள்ளைகள் முதலில் பார்க்கப்படுவார்கள். நீங்கள் ஆம்புலன்ஸ் மூலம் வந்தால் ஒழுங்கு மற்றும் காத்திருப்பு நேரங்கள் ஒரே விதமாக இருக்கும். காத்திருக்கும் அறைகளில் உள்ள திரைகளில் தற்போதைய அதிகபட்ச காத்திருப்பு நேரத்தை நீங்கள் சரிபார்க்கலாம்.
உங்கள் பிள்ளைக்கு நாங்கள் சிகிச்சை அளிப்பதற்கு முன்பு நீங்கள் வெளியேறத் திட்டமிடுகிறீர்களா என்பதை எங்களிடம் தயவுசெய்து கூறுங்கள்.
அவசர சிகிச்சைப் பிரிவில் என்ன நடக்கிறது
சிகிச்சை ஒழுங்கு
உங்கள் பிள்ளை எவ்வளவு விரைவாக மருத்துவரிடம் காட்டப்பட வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதற்கு பணியாளர்களுக்கு சிகிச்சை ஒழுங்கு உதுவும். அவர்கள் உங்கள் பிள்ளையைச் சோதித்து, உங்களிடம் சில கேள்விகளைக் கேட்பார்கள்.
அவசர சிகிச்சைப் பிரிவில் நுழைதல்
நீங்களும் உங்கள் பிள்ளையும் அவசர சிகிச்சைப் பிரிவிற்குள் ஒரு அறை (க்யூபிகல்) அல்லது காத்திருப்பு அறைக்குச் செல்வீர்கள். ஒரு எழுதுநர் உங்களிடம் சில கேள்விகளைக் கேட்பார். ஒரு டாக்டர் உங்களைப் பார்க்கும் வரை சிறிது நேரம் காத்திருக்க வேண்டி ஏற்படலாம். உங்கள் பிள்ளையின் நிலைமை மோசமாகி வருகிறது என்று நீங்கள் கவலைப்பட்டால் தயவுசெய்து எங்களுக்கு அறிவிக்கவும்.
நீங்கள் காத்திருக்கும் போது, உங்களால் முடிந்தால், பின்வரும் கேள்விகளுக்கு நீங்கள் கூறக்கூடிய பதில்களைப் பற்றிச் சிந்தியுங்கள்.
இன்று உங்கள் பிள்ளை மருத்துவமனைக்கு வரக் காரணம் என்ன?
|
- இது எவ்வளவு காலமாக நடக்கிறது? அதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்? அவருக்கு இதற்கு முன்பு இந்த நிலை ஏற்பட்டுள்ளதா?
- அவருக்கு வலி ஏற்படுகின்றதா?
- அவர் சாப்பிட்டாரா / குடித்தாரா / கழிப்பறைக்குச் சென்றாரா?
- இந்தப் பிரச்சினைக்காகவேறு ஒரு மருத்துவரைப் பார்த்தீர்களா?
- அவசர சிகிச்சைப் பிரிவுக்கு (ED) வருமாறு யாராவது உங்களுக்கு கூறினார்களா?
- அவசர சிகிச்சைப் பிரிவுக்கு வருவதற்கு முன்னர் ஏதேனும் பரிசோதனைகள் செய்தீர்களா அல்லது எக்ஸ் கதிர்ப்படங்கள் (x rays) எடுத்தீர்களா?
|
உங்கள் பிள்ளையின் மருத்துவ வரலாறு என்ன?
|
- அவர் தற்போது ஒரு சுகாதார நிபுணரிடம் சிகிச்சை பெறுகிறாரா? (உள ஆரோக்கியமும் இதில் அடங்கும்)
- அவருக்கு தற்போது வேறு என்னநோய் நிலைமைகள் அல்லது நோய்கள் உள்ளன? (குழந்தைகளைப் பொறுத்தவரை, ஊழியர்கள் அவர்களின் பிறப்பு பற்றி கேட்கலாம்)
- அவருக்கு முன்பு என்ன நோய்நிலைமைகள், நோய்கள் இருந்தன அல்லது அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டனவா?
- அவருக்கு தடுப்பூசிகள்இன்றுவரை உரிய நேரத்தில் வழங்கப்பட்டுள்ளனவா?
- நீங்கள் எங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பும் நோய்நிலைமைகள் அல்லது நோய்கள் பற்றிய குடும்ப வரலாறு ஏதேனும் உள்ளனவா?
|
உங்கள் பிள்ளை என்ன மருந்துகளை எடுக்கிறார்?
|
- கடந்த சில நாட்களாக (நுண்ணுயிர் எதிர்ப்பி (ஆன்டிபயாடிக்குகள்) உட்பட) என்ன மருந்துகளை அவர் எடுத்தார்?
- மருந்தின் பெயர், அந்த மருந்தின் அளவு மற்றும் அதனை எத்தனை முறை அவர் எடுக்கிறார்?
- உங்கள் பிள்ளை இன்று என்ன துணைமருந்துகள், வைட்டமின்கள் அல்லது மூலிகைகளை எடுத்தார் அல்லது வழமையாக எடுக்கிறார்?
- அண்மையில் அவர் ஏதேனும் மருந்துகள் எடுப்பதை நிறுத்திவிட்டாரா?
|
உங்கள் பிள்ளைக்கு என்ன ஒவ்வாமை இருக்கிறது?
|
- உணவு, மருந்து, பூச்சிக் கடிகள் மற்றும் லேட்டெக்ஸ் அல்லது கட்டுப்போடும் பொருட்கள் போன்ற பொருட்களுக்கான எதிர்வினைகள் இதில் அடங்கும் (இவை உறுதிப்படுத்தப்பட்டவையாக அல்லது சந்தேகிக்கப்படுபவையாக இருக்கலாம்).
|
நாங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நீங்கள் நினைக்கும் வேறு ஏதாவது உள்ளனவா?
|
- உங்கள் பிள்ளைக்கு அவரின் மருத்துவ பராமரிப்பு அல்லது சிகிச்சை தொடர்பான ஏதேனும் உணார்வதிர்ச்சி ஏற்பட்டுள்ளதா?
- உங்களுக்கு அல்லது உங்கள் பிள்ளைக்கு கலாச்சார, சமூக, மொழி, குடும்பம் அல்லது நடத்தை சார்ந்த ஏதேனும் தேவைகள் உள்ளனவா?
- உங்கள் பிள்ளை கடைசியாக எப்போது ஏதாவது சாப்பிட்டார் அல்லது குடித்தார்?
|
செவிலியரால் அல்லது மருத்துவரால் பார்க்கப்படுதல்.
என்ன பிரச்சினை என்பதை அறிந்து கொள்ள உதவும்முகமாக அவர்கள் உங்கள் பிள்ளையைக் கேள்விகள் கேட்டு சரிபார்ப்பார்கள்.
நீங்கள் உங்கள் பிள்ளை இல்லாத நிலையில் மருத்துவரிடம் பேசுவதற்குக் கேட்கலாம்.
வயதான இளம் பருவத்தினர் தங்கள் பெற்றோர் பெற்றோரிடமிருந்து விலகி மருத்துவரிடம்/செவிலியரிடம் பேசுவதற்குக் கேட்கலாம்.
உங்கள் செவிலியரிடம் அல்லது மருத்துவரிடம் பேசுங்கள்
பிரச்சினை என்ன, உங்கள் பிள்ளைக்கு என்ன தேவை என்பதை மருத்துவர் அல்லது செவிலியர் விளக்குவார்.
எந்த நேரத்திலும் எங்களிடம் கேள்விகளைக் கேளுங்கள்.
சோதனைகள் மற்றும் சிகிச்சை
பிரச்சினை என்ன என்பதைக் கண்டறிய உங்கள் பிள்ளைக்கு இரத்தப் பரிசோதனை, எக்ஸ்ரே அல்லது வேறு சில சோதனைகள் தேவைப்படலாம். அவசர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் போதும் அவர் சிகிச்சை பெறலாம். பரிசோதனை முடிவுகளுக்காக அல்லது உங்கள் பிள்ளை சிகிச்சைக்கு எவ்வாறு எதிரிவினையாற்றுகிறார் என்பதைப் பார்க்க நீங்கள் காத்திருக்க வேண்டி ஏற்படலாம்.
வீட்டிற்குச் செல்லுதல் அல்லது மருத்துவமனையில் அனுமதிக்கப்படுதல்
உங்கள் பிள்ளையின் நிலையைப் பொறுத்து, நீங்கள் வீட்டிற்குச் செல்லலாம், உங்கள் மருத்துவர் உங்கள் பிள்ளையை அவதானிப்பதற்காக நீண்ட நேரம் தங்கியிருக்க வேண்டி ஏற்படலாம் அல்லது மருத்துவமனையில் அனுமதிக்கப்படலாம்.
வீட்டுக்குச் செல்லுதல்
உங்கள் பிள்ளை வீட்டிற்குச் செல்லத் தயாராக இருக்கும் போது, மருத்துவர் அல்லது செவிலியர் உங்கள் பிள்ளையைக் கவனிக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிய சில தகவல்களைத் தருவார்கள், அதில் உங்கள் பிள்ளையின் நிலை குறித்த தகவல் தாளும் உங்கள் உள்ளூர் மருத்துவருக்கான கடிதமும் இருக்கலாம். உங்களுக்கோ அல்லது உங்கள் பிள்ளைக்கோ மருத்துவச் சான்றிதழ் தேவைப்பட்டால், நீங்கள் மருத்துவமனைவயை விட்டு வெளியேறுவதற்கு முன்னர் தயவுசெய்து உங்கள் மருத்துவரிடம் அல்லது செவிலியரிடம் கூறவும். உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் எங்களிடம் கேளுங்கள்.
நீங்கள் வீட்டில் இருக்கும் போது தயவுசெய்து மருத்துவர் உங்களுக்கு வழங்கிய ஏதேனும் அறிவுறுத்தல்களப் பின்பற்றுங்கள். உங்கள் பிள்ளையின் நிலை குணமடையவில்லை என்று நீங்கள் கவலைப்பட்டால், நீங்கள் பின்வருவனவற்றில் செய்யலாம்:
- உங்கள் உள்ளூர் மருத்துவரைப் போய்ப்பாருங்கள்
- 1800 022 222 ஊடாக Health Direct ஐ அழைக்கலாம்
- GP அவசர பராமரிப்பு கிளினிக் இற்குச் செல்லுங்கள்
- அவசரகால நிலைமை இருந்தால், 000ஊடாக ஆம்புலன்ஸுக்கு அழையுங்கள் அல்லது அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மீண்டும் வாருங்கள்
மருத்துவமனையில் அனுமதிக்கப்படுதல்
அவசரகால குழு அல்லது ஒரு சிறப்பு மருத்துவரின் கீழ் உங்கள் பிள்ளை மேலதிக பரிசோதனைகளுகாக மற்றும்/அல்லது சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படலாம். உங்கள் வீட்டிற்கு அருகாமையில் பராமரிப்பை வழங்குவதே எங்கள் நோக்கம், எனவே நாங்கள் உங்கள் பிள்ளையை சிகிச்சைக்காக உங்கள் உள்ளூர் மருத்துவமனையில் உள்ள பிள்ளைகள் வார்டுக்கு சிகிச்சைக்காக மாற்றலாம் அல்லது வீட்டு மருத்துவமனை (HiTH) செவிலியர்கள் உங்கள் பிள்ளையைப் பராமரிப்பதற்காகவும் பரிசோதிப்பதற்காகவும் உங்கள் வீட்டுக்கு வரலாம்.
நீங்கள் பேர்த் பிள்ளைகள் மருத்துவமனையில் தங்க வேண்டியிருந்தால், நீங்கள் எங்கள் அவசரகால குறுகிய தங்கும் பிரிவுக்கு (ESSU) அல்லது மருத்துவமனை வார்டுக்கு மாற்றப்படலாம்.
உங்கள் பிள்ளை ESSU இல் அனுமதிக்கப்பட்டால், அவர் அவசரகாலக் குழுவின் பராமரிப்பில் இருப்பார். உங்கள் பிள்ளைக்கு மேலும் சிகிச்சை அல்லது அறுவை சிகிச்சை தேவைப்பட்டால், அவர் மருத்துவமனை வார்டில் அனுமதிக்கப்படுவார்.
உங்கள் சுகாதரப் பராமரிப்புக் குழுவைச் சந்தியுங்கள்
உங்கள் பிள்ளையைப் பராமரிக்க உதவுவதற்கு நிறைய பேர் இருக்கிறார்கள்.
எங்களிடம் ஒரு அபோரிஜினல் சுகாதார ஊழியர் இருக்கிறார், அவர் பெரும்பாலான வார நாட்களில் அவசர சிகிச்சைப் பிரிவுக்குள் பராமரிப்பு வழங்க உதவுவார். நீங்கள் அவர்களைப் பார்க்க விரும்பினால் தயவுசெய்து கேளுங்கள்.
உங்கள் பிள்ளைக்கு வலி உள்ளதாக நீங்கள் நினைத்தால்
தயவு செய்து ஒரு செவிலியரிடம் பேசுங்கள், அவர் உங்கள் பிள்ளையை பரிசோதித்து தகுந்த வலி நிவாரணத்தை ஏற்பாடு செய்வார்.
உங்கள் பிள்ளையின் நிலை மோசமாகி வருவதாக நீங்கள் கவலைப்படுகிறீர்களா? நாங்கள் அறிய விரும்புகிறோம்
உங்கள் பிள்ளையின் நோய் அதிகரித்துள்ளதாகத் தெரிந்தால் அல்லது வழக்கத்திற்கு மாறாக நடந்து கொண்டால், உடனடியாக எங்களிடம் கூறுங்கள். உங்கள் பிள்ளையை நீங்களே நன்றாக அறிவீர்கள். நீங்கள் கூறுவதை நாங்கள் கேட்போம்.
உங்களுக்கு சிறிதளவே ஆங்கிலம் பேச முடியுமாக இருந்தால், 'எமர்ஜென்சி வெயிட்டிங் ரூம்' என்று அல்லது உங்கள் அறை எண்ணைக் கூறுங்கள்.
எங்கே...
கழிப்பறைகள்
- அவசர சிகிச்சைப் பிரிவின் உள்ளே நுழைவாயிலின் இடதுபுறத்தில் அனைவராலும் அணுகக்கூடிய கழிப்பறை அமைந்துள்ளது
- அவசர சிகிச்சைப் பிரிவின் பின்புறம் நோக்கிச் சென்று, Pod C காத்திருப்பு அறையை அடுத்து, குடிபான சாலைக்குப் பின்னால்
உங்களுக்கு உறுதியாகத் தெரியவில்லை என்றால் தயவு செய்து அடையாளங்களைப் பின்பற்றவும் அல்லது ஒரு ஊழியரிடம் கேளுங்கள்.
பெற்றோர் அறை
- அவசர சிகிச்சைப் பிரிவில் அனைவராலும் அணுகக்கூடிய கழிப்பறையை அடுத்து, நீலத் திரைக்குப் பின்னால் ஒரு உடைமாற்றல் மேசை உள்ளது.
- மற்றுமொரு உடைமாற்றல் மேசை Pod C க்கு அருகிலுள்ள குளியலறையொன்றில் உள்ளது.
ஊற்று நீர் அருந்துதல்
Pod C காத்திருப்புப் பகுதிக்கு அருகிலுள்ள குடிபானப் பகுதியில் தண்ணீர் கிடைக்கும்.
உணவு மற்றும் பானம்
- அவசர சிகிச்சைப் பிரிவின் உள்ளே Pod C காத்திருப்பு பகுதிக்கு அருகில் குடிபான பகுதியில் இலவச தேநீர் மற்றும் காபி வசதிகள் உள்ளன.
- தின்பண்டங்கள் மற்றும் பானங்கள் விற்கும் விற்பனை இயந்திரங்கள் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு வெளியே பசுமை மின்னுயர்த்தி (Green lifts )களுக்கு அருகில் அமைந்துள்ளன
- லிட்டில் லயன் கஃபே’ தரை மாடி பிரதான நுழைவாயிலுக்கு அருகில் உள்ளது
- த ஃபுட் ஹோல்’ 1 ஆம் மாடியில் அமைந்துள்ளது, ஊதா மின்னுயர்த்திகள் மூலம் அல்லது தரை மாடியில் ‘லிட்டில் லயன் கஃபே’க்கு வெளியே உள்ள படிகளின் ஊடாக அதனை அணுகலாம்
- ஒரு சிறிய சலுகைக் கடை, Xpress Zone, QEIIஇன் தரை மாடியில் மல்டிடெக் வாகனத் தரிப்பிடத்தில் அமைந்துள்ளது, அது திங்கள் முதல் சனி வரை காலை 7 மணி முதல் மாலை 8 மணி வரை திறந்திருக்கும்.
கட்டணம் செலுத்தும் பொதுத் தொலைபேசிகள்
அவசர சிகிச்சைப் பிரிவை மருத்துவமனையுடன் இணைக்கும் தாழ்வாரத்தில் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு வெளியே அமைந்துள்ளது.
ஏடீஎம் (ATM)
அவசர சிகிச்சைப் பிரிவை மருத்துவமனையுடன் இணைக்கும் தாழ்வாரத்தில் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு வெளியே அமைந்துள்ளது.
காப்பு மற்றும் பாதுகாப்பு
உங்கள் காப்பும் பாதுகாப்பும் எங்களுக்கு மிகவும் முக்கியமானவை. உங்களுக்கு கவலையளிக்கும் அல்லது உங்கள் அல்லது உங்கள் பிள்ளையின் பாதுகாப்பில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என நீங்கள் உணரும் எந்தவொரு நடத்தையையும் நீங்கள் கண்டால், தயவுசெய்து உடனடியாக ஒரு ஊழியரை அல்லது PCH பாதுகாப்புப் பிரிவை 6456 3003 ஊடாகத் தொடர்பு கொள்ளவும்.
துஷ்பிரயோகத்தை அறவே சகிக்க முடியாமை
அனைவரினதும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, துஷ்பிரயோகம் மற்றும் அத்துமீறல் தொடர்பில் பூச்சிய சகிப்புத் தன்மைக் கொள்களைப் பின்பற்றுகிறோம்.
உடல்ரீதியாகவோ அல்லது வார்த்தைகளாலோ துஷ்பிரயோகம் செய்யும் அல்லது அத்துமீறும் எவரும் உடனடியாக வெளியேறும்படி கேட்கப்படுவார்கள், தேவைப்பட்டால் பாதுகாப்பு ஊழியர்கள் அழைக்கப்படுவார்கள்.
புகைப்படம் எடுத்தல் அல்லது வீடியோ செய்தல்
நீங்கள் PCH இல் இருக்கும்போது எங்கள் நோயாளிகளின், குடும்பங்களின், பராமரிப்பாளர்களின், ஊழியர்களின் தனியுரிமை மற்றும் இரகசியத்தன்மையைப் பாதுகாப்பதற்காக, புகைப்படங்கள் அல்லது வீடியோ எடுக்க வேண்டாம்.
பாராட்டுக்கள் மற்றும் புகார்கள்
உங்களின் நேர்மறையான மற்றும் எதிர்மறையான பின்னூட்டங்கள் உங்களுக்கும் உங்கள் பிள்ளைக்கும் சிறந்த சேவையை வழங்க எங்களுக்கு உதவும்.
நீங்கள் அவசர சிகிச்சைப் பிரிவுக்குகு நீங்கள் வருகை தந்த பினன்ர், MyVisit கணக்கெடுப்பு மூலம் உங்கள் பின்னூட்டத்தைக் கேட்க உங்களுக்கு ஒரு குறுந்தகவல் அனுப்பப்படும். உங்கள் அனுபவத்தைப் பற்றி எங்களுக்குத் தெரிவிக்க, தயவு செய்து இந்தக் குறுகிய கருத்துக்கணிப்பைப் பூர்த்தி செய்யவும். எமது இணையதளத்தின் ஊடாகவும் ஒரு பாராட்டை அல்லது புகாரை முன்வைக்கலாம்.